ஆன்மிக களஞ்சியம்

சூரபத்மனை அழிக்க ஈஸ்வரன் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய கார்த்திகேயன்

Published On 2024-07-29 12:13 GMT   |   Update On 2024-07-29 12:13 GMT
  • அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் ஆறு தீப்பொறிகளிலிருந்து உரு பெறுவான்.
  • அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்” என்று கூறியருளினார் ஈஸ்வரன்.

சூரபத்மன் என்னும் அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான்.

தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் நூற்றியெட்டு யுகங்கள் வாழும் ஆயுளும், ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத மாபெரும் வரங்களைப் பெற்றான்.

தான் பெற்ற வரங்களினால் அகங்காரம் கொண்டு, தேவர்களையும் - முனிவர்களையும் சிறையிலடைத்து சித்திரவதை செய்தான் சூரபத்மன்.

நான்முகன், திருமால், இந்திரன், தேவர்கள் யாவரும் கயிலைவாழ் சிவபெருமானிடம் வந்து, சூரபத்மன் தேவர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைகள் புரிகின்றான் என்று முறையிட்டனர்.

சூரபத்மனின் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிவபெருமானை வேண்டினர்.

"தேவர்களே நீங்கள் இனி வருந்த வேண்டாம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யாம் ஒரு புதல்வனை ஈந்தருள்வோம்.

அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் ஆறு தீப்பொறிகளிலிருந்து உரு பெறுவான்.

அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்" என்று கூறியருளினார் ஈஸ்வரன்.

அதன்படியே சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் விட்டது, அவை ஆறு குழந்தைகளாக விசாக நட்சத்திரம் கொண்ட திருநாளில் அவதரித்தன.

அக்கினிப் பொறியாய் இருந்து அவதரித்தமையால் "அக்கினி கர்ப்பன்" என்றும், கங்கையில் தவழ்ந்தமையால் "காங்கேயன்" என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியமையால் "சரவணன், சரவண பவன்" என்றும் திருப்பெயர்களுடன் ஆறுமுகன் அழைக்கப்படுகிறார்.

இந்த ஆறு குழந்தைகளையும் ஈசனின் கட்டளைப்படி கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால், கார்த்திகேயன் என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார்.

திருக்கரத்தில் வேலை ஏந்தியதால் வேலாயுதன் என்றும், ஒளியுடைய வேலாக விளங்கியமையால் கதிர்வேலன் என்றும், தமிழ்த் தெய்வமாக விளங்குவதால் புலவன் என்றும், மயில் மீது ஊர்வதால் மயில் வாகனன் என்றும், சேவற்கொடியினை உடைய காரணத்தால் சேவற்கொடியோன் என்றும், கடம்பமலர் அணிவதால் கடம்பன் என்றும், அன்பர்களின் நெஞ்சத்தில் வாழ்வதால் குகன் என்றும், மாறாத இளமையோன் ஆதலால் குமரன் என்றும் பல்வேறு பெயர்களால் முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.

Tags:    

Similar News