ஆன்மிக களஞ்சியம்

தைப்பூசம் தகவல்கள்-II

Published On 2023-10-26 11:54 GMT   |   Update On 2023-10-26 11:54 GMT
  • உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுவது மலேசியாவில் மட்டுமே
  • சப்த கன்னியருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.

1. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது.

இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும்

தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

2. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.

சப்த கன்னியருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.

3. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது.

இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.

4. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.

5. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார்.

உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுவது மலேசியாவில் மட்டுமே.

6. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார்.

இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

7. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார்.

தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.

8. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும்.

அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர்.

தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.

9. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம்.

உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.

மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

10. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில்,

முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும்

அதனைத் தரிசிப்பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள்.

மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு,

கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து

வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News