தாமிரபரணிக் கரையில் சக்கரத்தாழ்வார்
- பொதுவாக எல்லா வெங்கடாஜலபதி கோவிலில்களிலும் மூலவர் பெருமாளாக இருப்பது தான் வழக்கம்.
- இதற்கு காரணம் இந்த விக்கிரத்தில் சுவாமி உயிரோட்டத்துடன் இருப்பது தான் காரணம் என்கிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் தாமிரபரணி நதியின் தென்கரையில் கரி சூழ்ந்த மங்கலம் என்ற ஊர் உள்ளது.
முன்னொரு காலத்தில் இந்த கிராமத்தைச் சுற்றிலும் கரும்புத் தோட்டங்கள் இருந்ததாகவும் அதை சாப்பிடுவதற்காக
எப்பொழுதும் யானைக் கூட்டம் இக்கிராமத்தைச் சுற்றி வந்தபடியால் கரி சூழ்ந்த மங்கலம் என்று பெயர்
பெற்றதாகவும் சொல்கிறார்கள்.
தாமிரபரணி கரையில் இருக்கும் இந்த ஊரில் சக்கரத்தாழ்வார் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் சிறப்பம்சம் மூலவர் தான்.
பொதுவாக எல்லா வெங்கடாஜலபதி கோவிலில்களிலும் மூலவர் பெருமாளாக இருப்பது தான் வழக்கம்.
ஆனால் இவ்வூரில் உற்சவர் அலமேலுமங்கா சமேதமாக வெங்கடாஜலபதி உள்ளார்.
மூலவராக சக்கரத்தாழ்வார் இருக்கிறார்.
ஒரே சுதர்சன சக்கரத்தில் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகா சுதர்சன மூர்த்தியாகவும் பின்புறம் நான்கு திருக்கரத்திலும் சக்கரம் ஏந்திய நிலையில் யோக நரசிம்மராகவும் மூலவர் காட்சி அளிக்கிறார்.
ஆதிகாலத்தில் இக்கோவிலில் கேரள நம்பூதிரிகளின் வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டது.
இக்கோவிலில் மூலஸ்தானத்திற்கு அருகில் செல்லும் பக்தர்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது அந்த வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்.
இதுவும் கேரள பாரம்பரியத்தில் இக்கோவில் பூஜிக்கப்பட்டதற்கு சான்றாக அமைகிறது.
மூலஸ்தான விக்கிரகத்திற்கு மாதத்திற்கு பத்து நாட்கள் வரை எண்ணெய் சாத்தி அபிஷேகம் நடைபெறுகிறது.
எண்ணெய் சாத்தி அபிஷேகம் செய்த சில மணி நேரங்களில் மூலவர் விக்கிரகத்தின் மேல் எண்ணெய் பசையே இல்லாமல் போய் விடும்.
இதற்கு காரணம் இந்த விக்கிரத்தில் சுவாமி உயிரோட்டத்துடன் இருப்பது தான் காரணம் என்கிறார்கள்.
இக்கோவில் மூலவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கருதப்படுகிறது.
கி.பி 1514ல் இக்கிராமத்துக்கு வந்த அப்பய்யங்கார் என்பவர் தாமிரத்தால் மூடிய கொடி மரம் நிறுவி, கருட வாகனம் அமைத்து, பதினோரு ஆழ்வார்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.
கல்வெட்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழி எழுத்துக்களும் இந்த கோவிலில் இடம் பெற்றுள்ளது.
இந்த கோவிலின் அருகே தென்னக்கத்தின் காளகஸ்தி என்றழைக்கப்படும் துருவாச முனிவர் அமைத்த
சிவன் கோவிலிலும், துருவாச முனிவரின் தீர்த்த கட்டமும் உள்ளது.
நடை காலை 7 மணி அளவில் இருந்து 10 மணி வரைக்கும் மாலை 4 மணியில் இருந்து 7 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.
இந்தக் கோவிலுக்கு நெல்லை புது பஸ்நிலையத்தில் இருந்து சேரன்மாதேவி வழியாக பாபநாசம் செல்லும் அனைத்து பஸ்களிலும் வரலாம்.
பத்தமடை என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் கோவிலை அடையலாம்.
நெல்லை சந்திப்பு மற்றும் சேரன்மாதேவியில் இருந்து கரி-சூழ்ந்த மங்கலத்திற்கு டவுண் பஸ் வசதி உண்டு.
கோவில் ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது.