ஆன்மிக களஞ்சியம்
null

தாமிரபரணியின் வரலாறு

Published On 2023-12-08 12:11 GMT   |   Update On 2023-12-08 12:41 GMT
  • தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
  • அப்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளித்தார்.

சிவன் - பார்வதி திருமணத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும்

கயிலை மலைக்கு சென்றதால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.

உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.

அப்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க, அகத்தியர்

அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.

ஆனால், உண்மையில் அது வெறும் முத்தாரம் மட்டும்தானா..?

இல்லை.

பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்து கொண்டிருந்தன!

சிவபெருமானின் தேவியான பார்வதிதேவி லலிதை என்னும் ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள்

ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர்.

அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், 'வேண்டும் வரம் கேளுங்கள்' என்று கூறினர்.

அதற்கு அவர்கள், ''தேவி, தாங்கள் நாராயணனாக வந்து எங்களை மணந்துகொள்ளவேண்டும்'' என்று கூறினர்.

தன்னில் சரிபாதியை தனக்குத் தந்த தன்னுடைய நாயகனைப் பிரிய மனமில்லாத தேவி, அவர்களுடைய

விருப்பத்தை நிறைவேற்ற நாரணியாகவும் நாராயணனாகவும் வடிவெடுத்தாள்.

நாரணியாகத் தன் நாயகனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.

தம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர்விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல,

அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து

தாமிர நிறம் பெற்று முத்துக்களாக மாறியது.

அம்பிகை அந்த முத்துக்களைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்துகொண்டாள்.

நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.

சிலகாலம் சென்றது.

தாட்சாயணியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல்

தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே பிராண தியாகம் செய்துகொண்டாள்.

பின்னர், இமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பினாள்.

அதற்காக எந்த சக்தியின் அம்சமாகத் தோன்றினாளோ அந்த பராசக்தியைக் குறித்து தவம் இயற்றினாள்.

பராசக்தியும், தன் அம்சமான தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்கு கொடுத்து அருளினாள்.

அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள்.

அகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது.

அதே வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர்.

பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும்,

உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்' என்றும் கூறி,

அவளையும் நதியுருவாக்கி கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார்.

மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர்,

வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில்

இருந்த தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்.

இதுதான் தாமிரபரணியின் சிலிர்ப்பூட்டும் வரலாறு.

Tags:    

Similar News