தேவர்களை காக்க கருமாரியாக மாறிய சக்தி
- நல்லவர் தேவர். அல்லவர் அசுரர். அல்லவை அழித்து, நல்லவை காக்கும் பொறுப்பு ஆண்டவனுடையது.
- தேவர்கள், தங்களுக்கு அபயம் அளிக்கப் புறப்பட்ட சக்தியை நெஞ்சாரப் போற்றித் துதித்தனர்.
அசுரருக்கும் தேவருக்குமிடையே ஆதிகாலந்தொட்டே போர் நடந்து வருகிறது.
நல்லவர் தேவர். அல்லவர் அசுரர். அல்லவை அழித்து, நல்லவை காக்கும் பொறுப்பு ஆண்டவனுடையது.
அசுரர்களின் கை ஓங்கியிருந்த காலம் அது. தேவர்கள் தீரா துன்பத்தில் சிக்கிச் சிறுமைப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
அவர்தம் குறைகேட்ட பரமசிவன், அசுரரின் ஆதிக்கம் அகற்றி, தேவரின் இடர் களைய எண்ணம் கொண்டார்.
'அசுரரின் ஆதிக்கத்தை சக்தியால் மட்டுமே சமாளிக்க இயலும்' என்பதால் பரமசிவன், பார்வதியை நோக்கினார்.
'உமையே... கருமாரியாகக் காட்சி தந்து, நீ ஆட்சி புரிய வேண்டிய காலம் கனிந்துவிட்டது.
இந்த வெண் நீற்றைப் பெற்று சிவனும் சக்தியுமாக இருந்து ஐந்தொழிலையும் புரிந்தருள்க' என்று கூறி தன் மேனிச் சாம்பலை எடுத்து அவளிடம் நீட்டினார்.
அன்னை சாம்பலைப் பெற்றாள். சிவனும் சக்தியுமாகத் தானே ஆகிக் காட்சி தந்தாள்.
தேவர்கள், தங்களுக்கு அபயம் அளிக்கப் புறப்பட்ட சக்தியை நெஞ்சாரப் போற்றித் துதித்தனர்.
அசுரரை அடக்க, அன்னை சக்தி கருநீல நிறத்தில் பயங்கரமான உக்கிர உருவம் எடுத்தாள்.
திரிசூலம் ஒன்றைத் தன்முன் நாட்டினாள். அன்னையின் உக்கிரம் தாங்காமல், அல்லல் விளைவித்த அசுரர்கள் அடங்கி ஒடுங்கினர்.
உக்கிர சக்தியை மகாவிஷ்ணு சாந்தப்படுத்தி, 'கருமாரி.... உலக மக்கள் உய்வதற்கு உன் கடைக்கண் அருட்பார்வையே போதும்.
தலை காட்டி, உடல் மறை...' என உள்ளன்போடு உரைத்தார்.
கருமாரி புன்முறுவலுடன் தலைகாட்டி, தன்னிலை மறைத்தாள்.
ஞாலத்து மக்கள் நாளும் வந்து வழிபட, எப்போதும் போல் ஓர் அழகிய வடிவமுடனும் எழுந்தருளினாள்.
மகாவிஷ்ணு சாந்தப்படுத்திய கருமாரி உருவம் நாரணி (நாராயணனின் பெண் வடிவம்) என்றும் கிருஷ்ணமாரி என்றும் அழகிய வடிவம் சிவை என்றும் (சிவனின் பெண் வடிவம்) அறியப்பட்டது.
காலத்துக்கு அப்பாற்பட்ட அகத்தியமுனிவர் அம்மையை இரட்டை உருவுடன் கூடிய இந்த நிலையில் கண்டு செந்தமிழால் போற்றித் துதித்தார்.
அம்மை அகத்தியருக்குக் காட்சி தந்தது தை மாதத்தில்.
பவுர்ணமி தினத்தில் பூச நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமையில், இந்த நாளே அன்னையின் அவதார தினமாகக் கருதப்படுகிறது.
காட்சியளித்த கருமாரி அகத்தியரிடம் சொன்னாள்.
'அகத்தியா, நீ வந்து வணங்கி வழிபடவே நான் காத்திருந்தேன். அசுரர் ஆணவம் அடங்கிவிட்டது.
இனி நானும் பாம்பு உருக்கொண்டு புற்றில் அடங்கியிருக்கப் போகிறேன்.
மறுபடி கலியுகத்தில் காட்சியளிப்பேன் கலியின் கொடுமையால் வாடும் மக்களுக்கு சாம்பலைக் கொண்டே சாந்தி அளிப்பேன்.
அப்போது எனக்கு திருக்கோவிலும் தீர்த்தக் குளமும் அமையும்.
பரிவாரக் கடவுளர்களும் பாங்குடனே அமைவர்.
அன்னை உரைத்தபடியே அனைத்தும் நடந்தேறின.
வேலங்காட்டில், வெள்ளை வேல மரத்தின் கீழ் பாம்புருவில் அன்னை, புற்றில் குடி கொண்டிருப்பது தெரிய வந்தது.
அந்த இடத்தில் அவளுக்கோர் ஆலயம் எழுந்தது.