ஆன்மிக களஞ்சியம்

திருக்கச்சி நம்பியின் வாழ்வில் சனி பகவான்

Published On 2024-06-20 10:56 GMT   |   Update On 2024-06-20 10:56 GMT
  • ஒருநாள் நம்பி, பெருமாளுக்கு ஆலவட்டம் விசிறிவிட்டு தமது இருப்பிடம் திரும்பினார்.
  • அப்போது சனீஸ்வரர் அவரைப் பிடித்துக் கொண்டார்.

மகா யோகிகளையும், ஞானிகளையும் கூட சனி பகவான் ஆட்டிப்படைத்து விடுகிறார் என்பதற்கு ஒரு கதை சொல்வதுண்டு.

வைஷ்ணவப் பெரியோர்களில் ஒருவர் திருக்கச்சி நம்பி இவர் ராமானுஜரின் ஆச்சார்யர்களில் ஒருவர்.

இவருக்கும் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கும் நெருக்கம் அதிகம்.

இருவரும் பல விஷயங்கள் பற்றிப் பேசுவார்கள். இரவில் இவர் காஞ்சி பெருமாளுக்கு ஆலவட்டம் விசிறும் திருப்பணியை செய்வார்.

இப்படிப்பட்ட நம்பியை ஏழரைச்சனி பிடிக்க வேண்டிய காலம் வந்தது. அவரிடம் சனிபகவான், "சுவாமி! தங்களைப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு தாங்கள் உத்தரவுதர வேண்டும்" என வணங்கி நின்றார்.

அதற்கு நம்பி, "பகவானே! தாங்கள் என்னைப்பிடிப்பதால் ஏற்படும் தன்பங்களை நான் தாங்கிக்கொள்கிறேன்.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் நான் பெருமாளுக்குச் செய்யக்கூடிய கைங்கரியத்திற்கு இடைஞ்சல் வந்துவிடுமே? எனவே, ஏழரை ஆண்டு என்பதைக் கொஞ்சம் குறைந்துக்கொள்ளக்கூடாதா?" என்றார்.

அதற்கு சனீஸ்வரர், "ஏழரை மாதங்கள் பிடித்துக் கொள்ளட்டுமா?" என்றார்.

நம்பியோ, "பெருமாளுக்கு சேவை செய்யாமல் ஒரு நொடிகூட இருக்க முடியாத எனக்கு ஏழரை மாதம் அதிகம்" என்றார். "சரி, ஏழரை நாள் பிடித்துக்கொள்ளட்டுமா?"

"அதெல்லாம் கூடாது" என்றார் நம்பி.

"அப்போ ஏழரை நாளிகை (3 மணி நேரம்) என்ற சனீஸ்வரரிடம் சரி என்றார் நம்பி.

ஒருநாள் நம்பி, பெருமாளுக்கு ஆலவட்டம் விசிறிவிட்டு தமது இருப்பிடம் திரும்பினார்.

அப்போது சனீஸ்வரர் அவரைப் பிடித்துக் கொண்டார். ஆரம்பித்து விட்டது ஏழரை அந்த நேரத்தில் கோவில் கருவறையில் திருவாராதனம் செய்ய ஆரம்பித்தார்.

ஒரு அர்ச்சகர் நைவேத்தியம் வைக்கும் தங்கக் கிண்ணத்தைக் காணவில்லை. யார் எடுத்திருப்பார்கள் யோசித்து யோசித்துப் பார்த்தார்.

கடைசியாக அர்ச்சகருக்கு ஞாபகம் வந்தது. கடைசியாக பெருமாளுக்கு கைங்கரியம் செய்துவிட்டுப் போனது திருக்கச்சி நம்பி. அவரோ மாபெரும் மகான்.

அவரா இந்தத் தட்டை எடுத்திருப்பார். ஒரே குழப்பம். இருந்தாலும் சந்தேகம் மட்டும் தீரவில்லை.

கோவில் அதிகாரிக்கு அர்ச்சகர் தகவல் தந்துவிட்டார். ஊழியர்கள் கோவில் முழுவதும் தேடினார்கள். ஆனாலும், கிடைக்கவில்லை.

கடைசியில் நம்பிக்கு ஆள் அனுப்பி வரவழைத்து விசாரிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

நம்பி வரவழைக்கப்பட்டார். கிண்ணம் என்னாயிற்று? கேள்விக்கணைகள் பாய்ந்தன. நெருப்பில் விழுந்த புழுவாய்த்துடித்தார் நம்பிகள்.

"பெருமானே! உனக்கு நான் செய்த பணிக்கு திருட்டுப்பட்டமா கட்டப்பார்க்கிறாய்? எப்போதும் என்னிடம் பேசுவாயே! இப்போது பேசு. எல்லார் மன்னிலையிலும் பேசு" என்றார்.

பெருமாள் அமைதியா இருந்துவிட்டார்.

நம்பி அவரிடம், "எல்லாம் உன் செயல். நீ என்ன விரும்புறாயோ அப்படியே நடக்கட்டும்" எனச் சொல்லி தண்டனை பெறுவதற்காக அரசவைக்கு காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது ஏழரை நாளிகை கடந்துவிட்டது. அர்ச்சகர்கள் ஓடி வந்தனர்.

"சுவாமி! கிண்ணம் கிடைத்துவிட்டது. சுவாமியின் பீடத்திற்குக் கீழே கிண்ணம் மறைந்திருந்தது. அறியாமல் நடந்த தவறுக்கு மன்னியுங்கள்" என்றார்.

சனீஸ்வரனும் இறைத்தொண்டு செய்த நம்பியிடம் நடந்ததை விளக்கி மன்னிப்புக் கேட்டு விலகிக் கொண்டார்.

Tags:    

Similar News