ஆன்மிக களஞ்சியம்

வாராகி மாலை

Published On 2023-12-08 12:40 GMT   |   Update On 2023-12-08 12:40 GMT
  • வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது.
  • அனைவரும் இதனை படித்து சகல பாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும்.

1. அன்னை வடிவம்

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டு கண்ணும்

குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்

திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி

மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே...

பொருள்: நவரத்தினம் அனைத்தும் அன்னைக்கு அவள் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது.

செவிகள் -குழை, திருவடிகள் -புஷ்பராகம், இரண்டு கண்கள் -நீல கல், கரங்கள் -கோமேதகம், நகம் -வைரம், சிரிப்பு -முத்து பவளம் போன்ற இதழ். திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போல் ஒளிரும் மேனியுடையதாகும்.

பயன்படுத்தும் முறை : அன்னையை வழிபடும்போது அவளை நம்மோடு இணைய விண்ணப்பம் செய்யும் முதல் பாடல்.

2. அருள்காட்சி வடிவம்

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது

ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே

ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால்

வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே

பொருள்: வாராகி யந்திர வடிவம் இது. முக்கோணம், அறுகோணம், வட்டம், சுற்றிலும் தாமரைத்தளம், மத்தியில் பீஜம், இதை முறையாக எழுதி வாராகியை வழிபட வாராகி 'வாலை' திரிபுர சுந்தரியாக எழுந்து நமக்கு 'அட்டமா சித்திகளை' வழங்குவாள் என்று பொருள்.

பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும்.

3. பக்தியின் உச்சம்

மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு

கை சிரத்து ஏந்திப் பலால் நீணம் நாறக் கடித்து உதறி

வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து

பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே.

பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி.

அதுவும் தூயவர்களை -அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள்.

அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்.

அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான்.

பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள்.

எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது.

பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.

4. சக்தியின் வெளிப்பாடு

படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

அடிக்கும் இரும்பு தடிகொண்டு பேய்கள் அவர்குருதி

குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலையிட்டு குலாவிமன்றில்

நடிக்கும் வாராகி பதினாலு உலகம் நடுங்கிடவே...

பொருள்: தவறிழைக்காத வாராகி பக்தர்கள், இன்னலுக்கு உட்பட்டால் அதற்கு காரணமானவர் பெறும் தண்டனை கடுமையானது.

தேவியின் தண்டம் (தடி) அவர்களை அடித்து துவம்சம் செய்யும்.

பக்தரை காக்கும் பேரரணாக தேவி வெளிப்படுவாள் என்று உணர வேண்டும்.

பயன்பாடு: வீண்பழி நாம் பெறும்போது இப்பாடலை பாடி, நன்மை பெறலாம்.

Tags:    

Similar News