டிகுவான் எலெக்ட்ரிக் வேரியண்டை உருவாக்கும் போக்ஸ்வேகன்
- போக்ஸ்வேகன் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- டிகுவான் மாடலின் முழு எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மாடல்கள் புதிதாக துவங்கப்பட்டு இருக்கும் ID துணை பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முற்றிலும் புது எலெக்ட்ரிக் மாடல்களுக்கு முன்னதாகவே போக்ஸ்வேகன் தற்போது விற்பனை செய்து வரும் கார்களின் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
உயரம் குறைக்கப்பட்டு, பின்புறம் எக்சாஸ்ட் டிப்கள் நீக்கப்பட்டு, முன்புற கிரில் மூடப்பட்டு இருக்கும் டிகுவான் மாடல் நர்பர்க்ரிங் களத்தில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. இந்த கார் டிகவான் மாடலின் தோற்றம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது போக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட்டாக இருக்கும் என தெரிகிறது. போக்ஸ்வேகன் குழுமத்தின் பல்வேறு எஸ்.யு.வி. மாடல்களுக்கு இந்த பாடி ஷெல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த வகையில் இந்த மாடல் போக்ஸ்வேகன் குழும நிறுவனங்களின் ஏதேனும் ஒரு எலெக்ட்ரிக் காருக்கான பிளாட்பார்மாக இருக்கலாம். தற்போதைய டிகுவான் மாடல் MQB பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்பை படத்தில் உள்ள மாடல் MEB பிளாட்பார்முக்கு ஏற்ப மாற்றப்பட்டு இருக்கலாம். எலெக்ட்ரிக் பவர்டிரெயின் சிங்கில் மோட்டார் அல்லது டூயல் மோட்டார் செட்டப் கொண்டிருக்கும் என தெரிகிறது.
எலெக்ட்ரிக் டிகுவான் தோற்றத்தில் இது முதல் முறை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கள் தான். அந்த வகையில், இன்னும் பலக் கட்ட சோதனைகளுக்கு பின்னரே இந்த மாடல் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் இந்த தசாப்தத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.