கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பையை இந்தியா 8-வது முறையாக வெல்லுமா? இலங்கையுடன் நாளை பலப்பரீட்சை

Published On 2023-09-16 08:23 GMT   |   Update On 2023-09-16 08:23 GMT
  • வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 6 ரன்னில் தோல்வி
  • சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும்

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந்தேதி தொடங்கியது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 'லீக்' முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் 'சூப்பர் 4' சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.

இதன் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.

இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா- தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.

இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. 'லீக்' சுற்றில் நேபாளம் 'சூப்பர் 4' சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது.

இறுதிப்போட்டிக்கு இந்தியா நுழைந்துவிட்டதால் வங்காளதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரர் (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.

நாளைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

Similar News