ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட்- இலங்கையை வீழ்த்தியது இந்தியா
- இந்திய வீராங்கனை ஜெமிமா 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார்.
- இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சில்கெட்:
ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி விளையாடிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 33 ரன் எடுத்தார்.
இதையடுத்து விளையாடிய இலங்கை பெண்கள் அணி 18.2 ஓவர் முடிவில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஹர்ஷித சமரவிக்ரம 26 ரன்னும், ஹாசினி பெரேரா 30 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். இந்தியா தரப்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து இந்திய பெண்கள் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.