டி20-யில் ரோகித் சர்மா சாதனையை முறியடித்த பாபர் அசாம்
- இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களை எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், இப்போட்டியில் அதனை முறியடித்து பாபர் அசாம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 4037 ரன்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 3987 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திலு, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3974 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அவர்களுக்கு அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் நான்காம் இடத்தையும், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.