இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தங்களை அறிவித்தது பிசிசிஐ
- கிரேட் ஏ பிரிவில் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா இடம் பெற்றுள்ளனர்.
- கடந்த முறை கிரேட் ஏ-வில் இடம்பெற்றிருந்த பூனம் யாதவ், இந்த முறை ஒப்பந்த பட்டியலிலேயே இல்லை.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில், 2022-2023-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
கிரேட் ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீராங்கனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் 19 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 2 பேர் குறைக்கப்பட்டு 17 வீராங்கனைகள் மட்டுமே ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.
கிரேட் ஏ பிரிவு தான் அதிகபட்சமாக ரூ.50 லட்சத்தை ஊதியமாக கொண்ட பிரிவு. கிரேட் பி பிரிவில் இடம்பெறும் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும், கிரேட் சி பிரிவில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும்.
இந்த ஆண்டு கிரேட் ஏ பிரிவில் 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா ஆகியோருடன் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு கிரேட் பி-யில் இடம்பெற்றிருந்த தீப்தி ஷர்மா இந்த முறை கிரேட் ஏவிற்கு முன்னேறியுள்ளார். கடந்த முறை கிரேட் ஏ-வில் இடம்பெற்றிருந்த பூனம் யாதவ், இந்த முறை ஒப்பந்த பட்டியலிலேயே இல்லை.
கிரேட் ஏ பிரிவில் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா
கிரேட் பி பிரிவில் ரேணுகா தாகூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வெர்மா, ரிச்சா கோஷ், ராஜேஷ்வரி கெய்க்வாட்
கிரேட் சி பிரிவில் மேகனா சிங், தேவிகா வைத்யா, சபினேனி மேகனா, அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்ட்ராகர், ஸ்னே ராணா, ராதா யாதவ், ஹர்லீன் தியோல், யஸ்டிகா பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.