தலைமை பயிற்சியாளர் பதவிக்காக பிசிசிஐ அணுகியது: ரிக்கி பாண்டிங்
- ஜூலை மாதம் முதல் 2027 டிசம்பர் மாதம் வரை தலைமை பயிற்சியாளராக செயல்பட வேண்டும்.
- வருடத்திற்கு 10 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதால் தனக்கு சரிபட்டு வராது.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளராக விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் 2025 ஜூலை முதல் 2027 டிசம்பர் மாதம் வரையாகும். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் ஸ்டீபன் பிளமிங் யோசிப்பதாக தகவல் வெளியானது. எம்.எஸ்.டோனி மூலம் பிளமிங்கை சம்மதிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக பிசிசிஐ தன்னை அணுகியது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வாய்ப்பை நிராகரித்தாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இருந்தால் இதை ஏற்பேனா என்பதை அறிந்து கொள்வதற்காக, ஐபிஎல் போட்டியின்போது இது தொடர்பான பேச்சுவார்த்தை மெல்ல மெல்ல நடைபெற்றது. நான் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை விரும்புகிறேன். ஆனால் எனது வாழ்க்கையில் கூடுதலான நேரத்தை ஆஸ்திரேலியாவில் செலவழிக்க விரும்புகிறேன்.
இந்திய அணியின் பயிற்சியாளராக நீங்கள் பதவி ஏற்றுக் கொண்டால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே, தலைமை பயிற்சியாளராக விரும்பினால், ஐபிஎல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
மேலும், தலைமைப் பயிற்சியாளர் என்பது வருடத்தில் 10 அல்லது 11 மாத வேலையாகும். இப்போது எனது வாழ்க்கை முறைக்கும் நான் மிகவும் ரசிக்கும் விஷயங்களுக்கும் தலைமை பயிற்சியாளர் பதவி பொருந்தாது.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.