வருமானத்தில் பிசிசிஐ முதலிடம் - மலைக்க வைக்கும் நிகர மதிப்பு
- ஐசிசி உறுப்பினர்களில் பிசிசிஐ அதிக வருமானம் ஈட்டும் வாரியமாக உள்ளது
- ஆஸ்திரேலிய வாரியத்தை விட பிசிசிஐ 28 மடங்கு அதிக மதிப்பு உடையது
பல விளையாட்டுகள் இந்தியாவில் பிரபலமாக இருந்தாலும், பெரும்பான்மையான இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்குத்தான் முதலிடம் தருகிறார்கள் என்பது நிதர்சன உண்மை.
தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் சர்வ வல்லமை பொருந்திய அமைப்பு, பிசிசிஐ (BCCI) எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் இயங்குகிறது.
ஐசிசி (ICC) எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்புடன் இந்தியாவின் சார்பான உறுப்பினராக இணைந்திருந்தாலும், ஐசிசி எடுக்கும் முடிவுகளில் பிசிசிஐ ஆதிக்கம் செய்யும் அளவிற்கு பலம் பொருந்தி இயங்கி வருகிறது.
இது ஒரு தனியார் அமைப்பாக செயல்படுவதால், இதன் வருமானம் இந்திய அரசாங்கத்தை சார்ந்து இல்லை. மற்ற வாரியங்களை விட ஐசிசி அமைப்பின் பெரும்பான்மை வருமானம் பிசிசிஐ அமைப்பிற்கே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் நிகர மதிப்பு ரூ.18,700 கோடி ($2.25 பில்லியன்) என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு அடுத்த நிலையில், இரண்டாவது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) அமைப்பு ரூ.660 கோடி ($79 மில்லியன்) மட்டுமே ஈட்டுகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் 2023 விளையாட்டு தொடரில் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் வருமான அடிப்படையில், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை விட 28 மடங்கு அதிக நிகர மதிப்பு கொண்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமே இந்திய ரசிகர்கள் தரும் அதிக வரவேற்பினால், பிற நாடுகளும் இந்திய அணியினர் தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடுவதையும் அதன் மூலம் வரும் விளம்பர வருவாயையும் பெரிதும் விரும்புகின்றனர்.
2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் (IPL) எனப்படும் இந்திய பிரீமியர் லீக் விளையாட்டு தொடருக்கு பிறகு பிசிசிஐக்கு கிடைத்து வரும் வருமானம் ஆண்டுதோறும் மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.