ஐபிஎல் டி20 போட்டி- கொல்கத்தாவுடன் இன்று மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்
- நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் தான்.
- கொல்கத்தாவை பொறுத்தவரை பேட்டிங்கில் வலுவாக உள்ளது. 4 ஆட்டங்களில் 185 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதே அதற்கு சான்று.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் தான். இதுவரை ஆடியுள்ள 5 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வார்னர் (3 அரைசதத்துடன் 228 ரன்), அக்ஷர் பட்டேல் (129 ரன் மற்றும் 2 விக்கெட்) தவிர மற்றவர்கள் தடுமாறுகிறார்கள்.
குறிப்பாக பிரித்வி ஷா (5 ஆட்டத்தில் 34 ரன்), மிட்செல் மார்ஷ் (3 ஆட்டத்தில் 4 ரன்) ஆகியோரின் சொதப்பல் தான் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே இவர்கள் ரன்வேட்டை நடத்தினால் தான் சரிவில் இருந்து எழுச்சி பெற முடியும். 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி ஒவ்வொரு ஆட்டமும் டெல்லிக்கு முக்கியமானதாகும். ஒன்றில் தோற்றாலும் சிக்கல் தான்.
இதே போல் முதல் 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி கடைசி இரு ஆட்டங்களில் முறையே ஐதராபாத், மும்பையிடம் 'சரண்' அடைந்தது. கொல்கத்தாவை பொறுத்தவரை பேட்டிங்கில் வலுவாக உள்ளது. 4 ஆட்டங்களில் 185 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதே அதற்கு சான்று. பந்து வீச்சு தான் சீராக இல்லை. அதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மொத்தத்தில் தோல்வியால் துவண்டு போய் உள்ள டெல்லி அணி தனது முதல் வெற்றியை ருசிக்குமா அல்லது கொல்கத்தா மீண்டும் வெற்றியடையுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.