null
ஷ்ரேயாஸ், இஷான் கிஷனை நீக்கியது நான் இல்லை- உண்மையை உடைத்த ஜெய் ஷா
- இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
- ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியது அவருடைய முடிவு.
இந்திய கிரிக்கெட் அணியின் 2023 -24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
இருவரும் உள்ளூர் தொடர்களில் விளையாடுமாறு பிசிசிஐ மற்றும் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார். ஆனால் இருவரும் அதைக் கேட்காமல் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதனால் இந்த இருவரையும் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கியது.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் நான் நீக்கவில்லை என்றும் அஜித் அகார்கர் தான் நீக்கினார் என்றும் பிசிசிஐ செயலாளர் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நீங்கள் அரசியலமைப்பை சரி பார்க்கலாம். அந்த முடிவு அஜித் அகர்கரிடம் உள்ளது. இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியது அவருடைய முடிவு. செயல்படுத்தியது மட்டுமே என்னுடைய வேலை. புதிதாக இணைக்கப்பட்ட சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தவிர்க்க முடியாதவர்கள்.
அதே போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்னை பிசிசிஐ கருதினால் நான் விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஸ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட தயாராக இருப்பதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இந்தியாவுக்காக விளையாட அதற்கு தகுந்த உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்காத இஷான் கிஷன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் மும்பை வீரராக விளையாடலாம்.
ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு நீங்கள் அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு திறமையை நிரூபிக்க வேண்டும். அதை சரியாக செய்பவர்களையே சரியான வீரர்களாக கருதுவோம். மும்பை போட்டி முடிந்ததும் இஷான் கிஷனிடம் மற்ற வீரர்களை போலவே நான் நட்பாக பேசினேன். வேறு எதுவுமில்லை.
என்று ஜெய்ஷா கூறினார்.