பயணத்தை தொடங்கியது டி20 உலகக் கோப்பைக்கான டிராபி
- இன்று முதல் 20-ந்தேதி வரை நான்கு நகரங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது.
- மே 16-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை 2-வது கட்டமாக கயானா, டிரினிடாட் அண்டு டொபாகோ எடுத்துச் செல்லப்படுகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் (டிராபி) சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளது. இன்று அமெரிக்க வீரர் அலி கான் மற்றும் இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றவரும், யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படுபவருமான கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளை நடத்தும் ஆறு நகரங்களில் உலா வர இருக்கிறது. அப்போது கிரிக்கெட் பிரபலங்கள் இந்த கோப்பையை ஏந்தி செல்வார்கள். போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும் பார்படோஸ் நகரில் முதன்முதலில் வலம் வர இருக்கிறது.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இதுபோன்று கோப்பைகள் எடுத்துச் செல்வது வழக்கம். உலகம் முழுவதும் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளில் அல்லது போட்டியை நடத்தும் நாட்டில் இதுபோன்று கோப்பை எடுத்துச் செல்லப்படும். ரசிகர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் மீடியாக்கள் ஆகியவற்றை ஈர்ப்பதற்கான ஒரு வழி இதுவாகும். போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுவதற்காகவும் இவ்வாறு நடத்தப்படும்.
ஏப்ரல் 12-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை பார்படோஸ், ஆன்டிகுவா, பார்புடா, செயின்ட் லூசியா ஆகிய நகரங்களில் உலகக் கோப்பை எடுத்துச் செல்லப்படும். பின்னர் மே 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை செயின்ட் வின்செட், கிரேனடைன்ஸ், டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் கயனா ஆகிய இடங்களில் எடுத்துச் செல்லப்படும்.