6 ஆண்டுகளுக்கு பிறகு டாப்-10 இடத்தை இழந்த கோலி- முன்னேறிய ரிஷப் பண்ட்
- இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்திய இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 11 இடங்கள் முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 6 ஆண்டுகளுக்கு பிறகு டாப் 10 இடத்தை இழந்துள்ளார். மோசமான பேட்டிங் காரணமாக அவர் 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம், இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 9-வது இடத்தில் நீடிக்கிறார். ஜடேஜா 8 இடங்கள் முன்னேறி 34-வது இடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்து தொடர் மற்றும் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்திய இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 11 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடத்திலும் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் 2-வது இடத்திலும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4-வது இடத்திலும் தொடர்கின்றனர்.
அதேபோல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் பும்ரா 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஜடேஜா முதல் இடம் பிடித்துள்ளார்.