டி20 உலகக்கோப்பை: ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடுகிறது இந்தியா...!
- ஐபிஎல் போட்டி 26-ந்தேதி முடிவடையும் நிலையில், உலகக்கோப்பை போட்டி தொடங்க ஒரு வாரம் கூட இல்லை.
- வழக்கமாக ஒவ்வொரு அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் 20 நாடுகள் தங்கள் அணியில் இடம்பெறும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்காளதேச அணி அமெரிக்கா புறப்பட்டுள்ளது.
பொதுவாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். அந்த வகையில் இந்தியா இரண்டு பயற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 26-ந்தேதி முடிவடைகிறது. ஜூன் 1-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இரண்டிற்கும் இடையில் ஒரு வார இடைவெளி கூட இல்லை.
இந்த நிலையில் இந்தியா ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் விளையாடும் எனத் தெரிகிறது. நியூயார்க்கில் நடைபெறும் அந்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் (ஜூன் 1-ந்தேதி) அமெரிக்கா கனடாவை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்தியா விளையாடும் லீக் போட்டிகள் நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பயணத்தை தவிர்க்க பயிற்சி ஆட்டமும் அங்கேயே நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் டல்லாஸ், நியூயார்க் மற்றும் மியாமி அருகில் உள்ள போர்ட் லார்டர்ஹில் ஆகிய மூன்று இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
34 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் ஐசன்ஹோவர் பார்க் மைதானத்தை அதிகவேக ஒட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் அதிகாரப்பூர்வமாக இன்று திறந்து வைத்தார்.