கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி: இங்கிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

Published On 2024-06-26 16:08 GMT   |   Update On 2024-06-26 16:08 GMT
  • நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
  • டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ளது.

கயானா:

டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.

இந்நிலையில், நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு கிறிஸ் கபானி மற்றும் ராட் டக்கர் ஆகியோர் அம்பயர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் கயானா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றியுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி சிறந்து விளங்குகிறது.

இதேபோல், இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

கடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும்.

அதே வேளையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

நாளை காலை 6 மணிக்கு டிரினிடாட்டில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News