ரிக்கி பாண்டிங், ரிச்சர்ட்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சாதனையை தகர்த்த ஜோரூட்
- கோலி தனது 27-வது சதத்தை பதிவு செய்த போது ரூட் 16 சதங்களை மட்டுமே அடித்திருந்தார்.
- ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி 27 சதம் அடித்துள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
இதற்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதை தொடர்ந்து இந்திய அணியையும் வீழ்த்தியுள்ளது. இந்த தொடரின் மூலம் ஜோரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜோரூட் 737 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் ஜோரூட் 4 சதங்களை விளாசியுள்ளார்.
5-வது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜோரூட் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28-வது சதத்தை பதிவு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி 27 சதம் அடித்துள்ளனர். கோலி தனது 27-வது சதத்தை பதிவு செய்த போது ரூட் 16 சதங்களை மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிராக 9 சதங்களை பதிவு செய்த ரூட் வரலாற்று சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஸ்மித் (8), ரிக்கி பாண்டிங் (8), ரிச்சர்ட்ஸ்(8) மற்றும் கேரி சோபர்ஸ் (8) ஆகியோரின் சாதனையை ஜோரூட் தகர்த்துள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நம்பமுடியாத அளவில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டில் ரூட் 11 சதங்கள் உட்பட 2,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த மாதம் ரூட் டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்கள் கடந்தார்.