null
டி20-யில் அறிமுகமான வயதான வீராங்கனை- ஆஷா சோபனா சாதனை
- திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், மின்னு மணி மற்றும் எஸ் சஜனா ஆகியோருக்குப் பிறகு பெண்கள் டி20-யில் இடம் பிடித்த கேரள வீராங்கனை ஆவார்.
- 4-வது டி20-யில் கேரளாவை சேர்ந்த சஜனா மற்றும் ஆஷா இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்களாதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் 3 டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியில் 33 வயதான ஆஷா சோபனா இடம் பெற்றார். இதன் மூலம் டி20-யில் அறிமுகமாகும் வயதான இந்தியப் பெண் என்ற பெருமையை கேரள வீராங்கனையான சோபனா பெற்றார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், மின்னு மணி மற்றும் எஸ் சஜனா ஆகியோருக்குப் பிறகு பெண்கள் டி20-யில் இடம் பிடித்த கேரள வீராங்கனை ஆவார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20-யில் சஜனா அறிமுகமானார். இன்று நடக்கும் 4-வது போட்டியில் சஜனா மற்றும் ஆஷா இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஆடவர் டி20 அணிக்காக அறிமுகமான அதிக வயதானவர் ராகுல் டிராவிட். 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக டிராவிட் விளையாடியபோது அவருக்கு வயது 38 வயது 232 நாட்கள். இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். 2006-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களம் இறங்கியபோது அவருக்கு வயது 33 வயது 221 நாட்கள் ஆகும்.