மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
- 21 பந்தில் 42 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர் சாவ்லா பந்தில் அவுட் ஆனார்.
- மும்பை தரப்பில் சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, பும்ரா, காம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கொல்கத்தா:
17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஓவர்கள் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதல் ஓவரில் சால்ட் 6 ரன்னிலும் 2-வது ஓவரில் சுனில் நரைன் டக் அவுட்டிலும் வெளியேறினர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 21 பந்தில் 42 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர் சாவ்லா பந்தில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் ரானா 33 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ரஸல் 24 ரன்களிலும் ரிங்கு சிங் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இறுதியில் கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பும்ரா, சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.