பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை
- குஜராத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
- 7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 5-வது வெற்றியை ருசித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
புதுடெல்லி:
2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த குஜராத் அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வோர்ட் 13 ரன்னில் ஹீலி மேத்யூஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து தயாளன் ஹேமலதா, மற்றொரு தொடக்க வீராங்கனையான கேப்டன் பெத் மூனியுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று அதிரடியாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பெத் மூனி 66 ரன்னில் (35 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) சஜீவன் சஜனா பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த போபி லிட்ச்பீல்டு (3 ரன்), ஆஷ்லிக் கார்ட்னெர் (1 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய தயாளன் ஹேமலதா 74 ரன்னில் (40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. பார்தி புல்மாலி 21 ரன்னுடன் (13 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் சாய்கா இஷாக் 2 விக்கெட்டும், ஹீலி மேத்யூஸ், ஷப்னிம் இஸ்மாயில், பூஜா வஸ்ட்ராகர், சஜீவன் சஜனா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹீலி மேத்யூஸ் 18 ரன்னிலும், நாட் சிவெர் 2 ரன்னிலும், யாஸ்திகா பாட்டியா 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 95 ரன்களுடனும் (48 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்), அமெலி கெர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 5-வது வெற்றியை ருசித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.