கிரிக்கெட் (Cricket)

சச்சின் சாதனையை ரூட் முறியடிப்பார்- மைக்கெல் வாகன் நம்பிக்கை

Published On 2024-07-22 16:28 GMT   |   Update On 2024-07-22 16:28 GMT
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார்.
  • அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை நான் விரும்புவேன்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 241 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதனால் 2- 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது.

இந்த வெற்றிக்கு இங்கிலாந்தின் ஜோ ரூட் பேட்டிங்கில் 14, 122 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றினார். இதையும் சேர்த்து அவர் 142 டெஸ்ட் போட்டிகளில் 11940* ரன்கள் குவித்துள்ளார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சந்தர்பாலை (11867) முந்தியுள்ள அவர் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைப்பார் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியவதாவது:-


இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார். அப்படியே சச்சின் டெண்டுல்கரையும் அவர் முந்தப்போவது ஸ்பெஷலாக இருக்கும். பேட்டிங்கில் தற்போதைய இங்கிலாந்து அணி கடந்த காலத்தை போல் பொறுப்பற்றவர்களாக தெரியவில்லை. அவர்கள் விரைவாக ஸ்கோர் செய்கின்றனர்.

அவர்கள் ஈகோவை எடுத்துக் கொள்வதாகவும் தெரியவில்லை. அவர்கள் நன்றாக விளையாடுகின்றனர். அதற்கு ரூட் பாறையைப் போல் நின்று பேட்டிங்கில் முக்கிய பங்காற்றுகிறார். அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை நான் விரும்புவேன்.

என்று மைக்கேல் வாகன் கூறினார்.

ஜாம்பவான் சச்சின் 24 வருட டெஸ்ட் கிரிக்கெட் 200 போட்டிகளில் 15921 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News