கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் இன்று பலப்பரீட்சை

Published On 2023-03-26 01:40 GMT   |   Update On 2023-03-26 01:40 GMT
  • பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.
  • கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். போட்டியை போன்று பெண்களுக்கான பிரிமீயர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பெண்கள் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.

இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணியை பொறுத்தமட்டில் முதல் 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு ஆதிக்கம் செலுத்தியது.

அதன் பிறகு 2 ஆட்டங்களில் தோற்று சற்று சரிவை சந்தித்த அந்த அணி வெளியேற்றுதல் சுற்றில் உ.பி.வாரியர்சை எளிதில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

இந்த போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமெலி கெர், பூஜா வஸ்ட்ராகர், ஹூமைரா காஸி, அமன்ஜோத் கவுர், இசி வோங், ஜிந்திமணி கலிதா, சாய்கா இஷாக். டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, அலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஜானே காப், ஜெஸ் ஜோனசென், தானியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ் அல்லது தாரா நோரிஸ்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

Similar News