மோசமான பேட்டிங்காக புஜராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்? கவாஸ்கர் கடும் கண்டனம்
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள்.
- அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெஸ்ட் அணியில் இருந்து பேட்ஸ்மேன்களில் புஜராவும், பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவும் நீக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து புஜரா நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற வீரர்களுக்காக புஜாராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புஜாரா டெஸ்ட் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள். மோசமான பேட்டிங்காக புஜராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்?
அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் விசுவாசம் உள்ள அமைதியான சேவகர். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடரவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டுவிட்டாரா? மற்றவர்கள் அணியில் இருக்கும் போது புஜரா மட்டும் நீக்கப்பட்டது ஏன்?
தேர்வுக்குழு என்ன அளவுகோல் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்தது.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.