பணிச்சுமை விவகாரம்: ரோகித் சர்மாவுக்கு காட்டமாக பதிலடி கொடுத்த மஞ்ச்ரேக்கர்
- ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது.
- ஐபிஎல் நிர்வாகம் அணி உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை வழங்க வேண்டும்.
ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் 10 அணிகளில் பல்வேறு இந்திய நட்சத்திர வீரர்கள் தங்களது அணிகளுக்காக விளையாட தயாராகி வருகின்றனர்.
இருப்பினும் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.
முன்னதாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இதே போல் ஒரு வாரம் முன்பாக இங்கிலாந்து பயணித்து வலை பயிற்சிகளை மட்டும் செய்து நேரடியாக களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்களை 2023 ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட சில போட்டிகளில் ஓய்வு பெறுமாறு ரோகித் சர்மா அறிவுறுத்தியிருந்தார். சொல்லப்போனால் மும்பை அணியில் சில போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வெடுப்பார் என்றும் அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழி நடத்துவார் என்றும் நேற்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் பல கோடி ரூபாய்களை கொடுக்கும் ஐபிஎல் நிர்வாகங்கள் ஏன் அது போன்ற ஓய்வு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்த வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-
ஐபிஎல் தொடரின் வெற்றி பெரும்பாலும் வீரர்களின் ஃபிட்னஸை அடிப்படையாக கொண்டுள்ளது. அதில் அனைவரும் தங்களுடைய முழு திறமைக்கேற்றார் போல் விளையாடுகிறார்கள்.
அதனாலயே ரசிகர்கள் விரும்பும் இந்த தொடர் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனவே உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாட வேண்டும் என்பதற்காக முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதை விரும்பும் ஒருவராக நான் இருப்பதில்லை. ஏனெனில் சர்வதேச அளவில் விளையாடும் போதும் காயத்தை சந்தித்து நிறைய முக்கிய வீரர்கள் வெளியேறுகிறார்கள் என்பதால் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
எனவே ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. ஏனெனில் நிறைய பணத்தை செலவழிக்கும் அணி உரிமையாளர்களுக்கு தாங்கள் வாங்கும் வீரர்களை முழுமையாக தேவைப்படும் அளவுக்கு பயன்படுத்தும் சுதந்திரத்தை பெற வேண்டும். அதில் ஐபிஎல் நிர்வாகம் அணி உரிமையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகையை வழங்க வேண்டும்.
என்று கூறியுள்ளார்.