ரோகித் சர்மா சதம்: அதிக சிக்ஸில் டோனியை முந்தினார்
- 79 சிக்ஸ் உடன் டோனியை 3-வது இடத்திற்கு தள்ளியுள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் கண்ட தொடக்க வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன் என்ற நிலையில் ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஜடேஜா 68 ரன்களுடனும், ரோகித் சர்மா 97 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ரேஹன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலும், 3-வது பந்திலும் தலா இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அவர் 157 பந்தில் சதத்தை எட்டினார். சொந்த மண்ணில் அவரது 9-வது சதம் இதுவாகும்.
மேலும், இந்த ஆட்டத்தில் இதுவரை இரண்டு சிக்சர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சேவாக் 90 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளார். டோனி 78 சிக்ஸ் உடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா 79 சிக்ஸ் உடன் டோனியை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்துக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கி 3 சதங்கள் அடித்துள்ளார். முரளி விஜய், கேஎல் ராகுல், விஜய் மெர்சன்ட் ஆகியோரும் 3 சதங்கள் அடித்துள்ளனர். கவாஸ்கர் 4 சதங்கள் அடித்துள்ளார்.