கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா- பந்து வீச்சாளர்களை பாராட்டிய ரோகித் சர்மா

Published On 2023-10-14 16:37 GMT   |   Update On 2023-10-14 16:37 GMT
  • இந்திய அணியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்தவர்கள் பந்துவீச்சாளர்கள் தான்.
  • நிச்சயம் இந்த ஆடுகளம் 190 ரன்கள் சேர்க்கக் கூடியது அல்ல.

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணி தரப்பில் பாபர் அசாம் 50 ரன், ரிஸ்வான் 49 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், பாண்ட்யா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், கில் களம் புகுந்தனர். இதில் கில் 16 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த கோலி 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 63 பந்தில் 86 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கே.எல்.ராகுல் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

இந்திய அணியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்தவர்கள் பந்துவீச்சாளர்கள் தான். நிச்சயம் இந்த ஆடுகளம் 190 ரன்கள் சேர்க்கக் கூடியது அல்ல. பாகிஸ்தான் அணியினர் ஒரு கட்டத்தில் 280 ரன்கள் சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டது பெருமை அளிக்கிறது.

ஒரு கேப்டனாக எனது பொறுப்பும் களத்தில் முக்கியமானது. பிட்சின் தன்மையை சரியாக கணித்து எந்த வீரர் பணியை கச்சிதமாக முடிப்பார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அனைத்து நாட்களிலும் எல்லோராலும் சிறப்பாக செயல்பட முடியாது. ஒவ்வொரு நாளும் வேறு வேறு வீரர்களின் நாளாக இருக்கும். ஷர்துல் தாக்கூருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதற்கு அதுதான் காரணம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதால், பெரிதாக கொண்டாட தேவையில்லை. அதேபோல் சோகமடையவும் தேவையில்லை. அடுத்த இலக்கை நோக்கி நடக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு அணியும் தரமான அணிகள் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News