கிரிக்கெட் (Cricket)

எனக்குள் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை- ரோகித் சர்மா

Published On 2023-08-29 05:45 GMT   |   Update On 2023-08-29 05:45 GMT
  • சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
  • அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது.

புதுடெல்லி:

ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆயத்தமாகி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒரு கேப்டனாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் வெளியில் நடக்கும் விஷயங்களை பற்றி கவலைப்படாமல் மனதை நெருக்கடியின்றி எப்படி இயல்பாக வைத்துக் கொள்கிறேன் என்பதே முக்கியம். இன்னும் சொல்லப்போனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எத்தகைய மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலைக்கு செல்ல விரும்புகிறேன். அப்போது மனதளவில் மிகவும் நல்ல நிலையில் இருந்தேன். போட்டிக்கும் சிறப்பாக தயாராகி (5 சதம் உள்பட 648 ரன் குவித்தார்) இருந்தேன். அந்த சமயம் என்னவெல்லாம் செய்தேனோ அதனை மீண்டும் நினைவுக்குள் கொண்டு வந்து, அதன்படி தயாராக முயற்சிக்கிறேன். அதை செய்ய எனக்கு போதுமான நேரம் இருக்கிறது.

ஒரு போட்டியின் முடிவு அல்லது ஒரே ஒரு சாம்பியன்ஷிப் என்னை எந்த வகையிலும் மாற்றி விடாது. கடந்த 16 ஆண்டுகளாக எப்படி இருக்கிறேனோ அதே போல் தான் இப்போதும் இருக்கிறேன். எனக்குள் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. அடுத்த 2 மாதங்களில் எனது இலக்கை எப்படி நிறைவேற்ற போகிறேன் என்பதில் ஒரு வீரராகவும், அணியாகவும் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி ஒன்று அல்லது 2 மாதத்திற்காக ஒரு நபர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.

சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுக்கு என்ன தரப்படுகிறதோ அதை உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும். எது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது என்பதை தான் நான் சிந்திக்கிறேன். என்னை பொறுத்தவரை சக வீரர்களுடன் இணக்கமான சூழலை கொண்டு வந்து, சிறந்த நினைவுகளை உருவாக்க வேண்டும். உங்களிடம் என்ன இருக்கிறது, என்ன கிடைக்கிறது என்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது. அந்த சமயத்தில் நானும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களிடம் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறோம். இதே போல் களம் காணும் 11 பேரை இறுதி செய்யும் போதும், வெளியில் இருக்கும் மற்ற வீரர்களிடம் நீங்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுவோம்.

சில நேரங்களில் அவர்களது இடத்தில் என்னை வைத்து பார்ப்பேன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு என்னை தேர்வு செய்யாத போது, மனம் உடைந்து புலம்பி இருக்கிறேன். ஆனால் கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்கள் ஆகியோர் எதிரணி, ஆடுகளம், எங்களது பலம், பலவீனம் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே அணியை தேர்வு செய்கிறார்கள். ஆனால் எல்லா நேரமும் நமது தேர்வு சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் தவறு நடக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News