கிரிக்கெட் (Cricket)

இந்திய அணிக்காக ஆடும் போது முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும்- ரோகித் சர்மா

Published On 2022-12-08 09:00 GMT   |   Update On 2022-12-08 09:00 GMT
  • வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்க முடியாது.
  • அவர்களுடைய பணிச் சுமையையும் நாம் கண்காணிக்க வேண்டும்.

மிர்பூர்:

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.

மிர்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய வங்காள தேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 272 ரன் இலக்காக இருந்தது.

8-வது வீரராக ஆடிய மெகிதி ஹசன் மிராஸ் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 83 பந்தில் 100 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), மகமதுல்லா 77 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

வங்காளதேசம் ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 69 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது. இந்த சாதகமான நிலையை இந்திய அணி தக்க வைத்து கொள்ளவில்லை.

பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்தது. இதனால் 5 ரன்னில் தோற்றது.

ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) அக்‌ஷர் படேல் 56 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), காயத்துடன் ஆடிய கேப்டன் ரோகிச் சர்மா 51 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். எபாதத் உசேன் 3 விக்கெட்டும், மெகிதி ஹசன் மிராஸ், சகீப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட்டில் தோற்றது. தற்போது மீண்டும் தோற்றதால் ஒரு நாள் தொடரை இழந்தது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் காயம் காரண மாக ரோகித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் ஆடவில்லை.

நேற்றைய போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா கூறியதாவது:-

எனது கை விரலில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. இதனால் நான் பேட்டிங் செய்ய வந்தேன். வங்காளதேச அணியின் 6 விக்கெட்டுகளை 69 ரன்னுக்குள் வீழ்த்திய பிறகு 271 ரன்கள் எடுக்க விட்டது மிகப்பெரிய தவறாகும்.

எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. தொடக்கத்தில் அபாரமாக வீசினார்கள். மிடில் ஓவரிலும், கடைசி கட்டத்திலும் ரன்களை வாரி கொடுத்தனர். இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஹசன் மிராஸ், மகமதுல்லா சிறப்பாக ஆடினார்கள். அவர்களது பார்ட்னர் ஷிப்பை உடைக்க முடியவில்லை.

எங்களது அணியில் உள்ள சில வீரர்களுக்கு காயம் பிரச்சினை இருந்தது. இதன் அடிப்படை காரணம் குறித்து யோசிக்க வேண்டும். வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாமல் அணியில் விளையாடுகிறார்கள். அப்படி இருந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது.

இந்திய அணிக்காக ஆடும் போது 100 சதவீத உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். இது குறித்து ஆய்வு செய்வது அவசியம்.

வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்க முடியாது. அவர்களுடைய பணிச் சுமையையும் நாம் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News