பாதுகாப்பை ஒரு காரணமாக சொல்லாதீங்க.. அப்ரிடி அதிருப்தி
- இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம்.
- நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.
ஐசிசி 2025 சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. முதல் முறையாக இந்த தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுகிறது. எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது.
ஆனால் அந்தத் தொடரில் நாங்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா கூறிவருகிறது. ஏனெனில் 2008-க்குப்பின் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. இருப்பினும் ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் பொதுவான இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் அதிருப்தியடைந்துள்ள பாகிஸ்தான் வாரியம் ஒருவேளை வரவில்லையெனில் இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு தொடரை நடத்தத் தயாராகியுள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவில் தங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதையும் தாண்டி இந்தியாவில் 2016 டி20 உலகக் கோப்பை, 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியதாக சாகித் அப்ரிடி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடினமான நேரங்களிலும் நாங்கள் இந்தியாவுக்கு பலமுறை சென்றுள்ளோம். இந்தியாவில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும் நாங்கள் அங்கே சென்றோம். நாங்கள் அவர்களுடைய எண்ணங்களை தெரிந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.
எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதும் பாகிஸ்தான் வாரியமும் அரசும் இந்தியா செல்வதற்கான வழியை துவங்கின. அதே போல இந்தியா விரும்பினால் வரலாம். ஆனால் விரும்பவில்லையெனில் பாதுகாப்பு என்பதை அவர்கள் சாக்காக பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு சாகித் அபிரிடி கூறினார்.