கிரிக்கெட் (Cricket)

மிரட்டல் எதிரொலி: இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2024-05-30 03:48 GMT   |   Update On 2024-05-30 05:41 GMT
  • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
  • வரும் 9-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுகிறது.

நியூயார்க்:

9-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

இந்நிலையில், அச்சுறுத்லை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்ததாக தகவல் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து அச்சுறுத்தல் வந்ததாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நியூயார்க்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மைதானம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத்துறையின் தகவல்படி இந்த நேரத்தில் நம்பகமான பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனாலும் அதிகப்படியான கண்காணிப்பு, முழுமையான சோதனைகள் உள்ளிட்ட உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொது பாதுகாப்பே எனது முதன்மையான முன்னுரிமை. உலகக் கோப்பை போட்டி பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News