சமிகா கருணாரத்னேவுக்கு ஓராண்டுக்கு தடை விதித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்
- தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- கருணாரத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கேள்வி
இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே (வயது 26) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை மீறியதற்காக, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர் எந்த விதிமுறைகளை மீறினார் என்பது குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. ஆனால் சமிகா கருணாரத்னே தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக தடை என்பதால், கருணாரத்னே சர்வதேச அளவில் விளையாட அனுமதிக்கப்படுகிறார். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடக்கவிருக்கும் உள்நாட்டு தொடருக்கான இலங்கையின் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார். கருணாரத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, அவரது ஒப்புதலுக்குப் பிறகு இலங்கை அணி அறிவிக்கப்படும்.