பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை முதல் நாள் ஆட்டம் முடிவில் 242/6
- இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
- தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதலில் மளமள என விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.
அந்த அணி 54 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
நிஷான் மதுஷ்கா 4 ரன்னிலும், குஷால் மெண்டிஸ் 12 ரன்னிலும், கருணா ரத்னே 29 ரன்னிலும், ஷாஹீன் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.
சண்டிமல் ஒரு ரன் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
ஐந்தாவது விக்கெட்டிற்கு மேத்யூஸ் உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரை சதம் அடித்து சிறப்பாக விளையாடினர்.
மேத்யூஸ் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
ஆறாவது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வாவுடன் சமாராவிக்ரமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் ஆட்டம் வெகு நேரத்திற்கு பின் தொடங்கியது.
66-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இலங்கை முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டு இழப்பிற்கு242 ரன்கள் எடுத்துள்ளது.
தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.