கிரிக்கெட் (Cricket)

2வது டெஸ்டில் வெற்றி: வங்காளதேசத்துக்கு எதிராக 2-0 என தொடரை கைப்பற்றியது இலங்கை

Published On 2024-04-03 09:04 GMT   |   Update On 2024-04-03 09:04 GMT
  • வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • இதன்மூலம் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

சட்டோகிராம்:

வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும் எடுத்தனர்.

வங்காளதேசம் சார்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய வங்காளதேசம் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜாகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 157 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து, 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சில் களமிறங்கியது.

அந்த அணியின் மொமினுல் ஹக் அரை சதம் விளாசி அவுட் ஆனார். லிட்டன் தாஸ் 38 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 36 ரன்னும் எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மெஹிதி ஹசன் மிராஸ் பொறுப்பாக ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்துள்ளார்.

இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இலங்கை சார்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கமிந்து மெண்டிஸ் பெற்றார்.

Tags:    

Similar News