நிச்சயமாக... ஐபிஎல் விருப்பத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் நட்சத்திர வீரர்
- 2008-ம் ஆண்டு அறிமுக தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
- பின்னர் பல்வேறு காரணங்களால் அவர்கள் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
உலகளவில் நடைபெறும் டி20 லீக்கில் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் இடம் பிடித்து விளையாடுவார்கள்.
கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கொடுப்பதாலும், மைதானம் நிறைந்து காணப்படும் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதாலும், ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
2008-ம் ஆண்டு முதன்முதலாக ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது. தொடக்க சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். தன்வீர் சோஹைல், உமர் குல், கம்ரான் அக்மல் போன்ற வீரர்கள் விளையாடினார்கள்.
அதன்பின் எல்லையில் தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் கிடையாது என்று இந்திய அரசு முடிவு செய்தது. அரசியல் பதற்றம்காரணமாக அது தொடர்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ள.
அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடங்கியது. இருந்தபோதிலும், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து தங்களது விருப்பதை தெரிவித்து வருவது வழக்கம்தான்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹசன் அலி கூறுகையில் "ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்புகிறார்கள். நானும் அங்கே சென்று விளையாட விரும்புகிறேன். உலகத்தில் உள்ள மிகப்பெரிய லீக்கில் ஐபிஎல் லீக்கும் ஒன்று. எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், "ஐபிஎல் போட்டியில் விளையாட முடியவில்லை என்பதை குறித்து பாகிஸ்தான் வீரர்கள் கவலையடையக் கூடாது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.