கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவை அப்செட் ஆக்கிய ஆப்கானிஸ்தான் - 21 ரன்களில் வெற்றி

Published On 2024-06-23 04:04 GMT   |   Update On 2024-06-23 04:04 GMT
  • ஆப்கானிஸ்தான் சார்பில் குர்பாஸ் மற்றும் இப்ராகிம் அரைசதம் அடித்தனர்.
  • பேட் கம்மின்ஸ் இந்த போட்டியிலும் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்தார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் அடித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முறையே 60 மற்றும் 51 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தனர்.

 


அடுத்து வவந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் இந்த போட்டியிலும் ஹாட் ட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

அந்த வகையில், உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார். இவர் தவிர ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

149 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 


இவரை தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 59 ரன்களில் நடையை கட்ட ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் குலாப்தீன் நயிப் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அஸ்மதுல்லா ஓமர்சாய், முகமது நபி மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News