டி20 உலகக் கோப்பை.. பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நியூசிலாந்து
- பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
- டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் 39-வது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக துவங்கியது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
பப்புவா நியூ கினியா அணிக்கு துவக்க வீரர்கள் டோனி உரா (1) மற்றும் கேப்டன் அசாத் வாலா (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சார்லெஸ் அமினி மற்றும் சீஸ் பௌ முறையே 17 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதன் மூலம் அந்த அணி 19.4 ஓவர்களில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். இவர் தவிர டிரெண்ட் பௌல்ட், டிம் சவுதி மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 12.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார். இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மொரி 2 விக்கெட்டுகளையும், செமோ கமியா 1 விக்கெட் வீழ்த்தினர்.