கிரிக்கெட் (Cricket)

இந்தியா-வங்காளதேசம் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

Published On 2022-12-12 21:49 GMT   |   Update On 2022-12-13 01:21 GMT
  • சட்டோகிராம் மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
  • ரோகித் சர்மா விலகியதால் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்க மாட்டார் என்றும் 2வது டெஸ்ட்டில் அவர் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கேப்டனாக கே.எல். ராகுலும், துணை கேப்டனாக புஜாராவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்மான் கில்லுடன் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்த டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அல்லது சௌராஷ்டிரா அணி வீரர் ஜெய்தேவ் உன்கட் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தரபிரதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமாரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேற, வங்காளதேசத்துடனான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித் தலைவர் கே.எல்.ராகுல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை எட்டுவதற்கு நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறோம், இறுதி சுற்றை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். களத்தில் ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட பகுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News