திண்டுக்கல் டிராகன்ஸ் அபார பந்துவீச்சு.. 120 ரன்களில் சுருண்டது பால்சி திருச்சி
- கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன் இணைந்த ராஜ் குமார் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார்.
- திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு கோவையில் நடைபெறும் ஆட்டத்தில் பார்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.
கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ துவக்க வீரராக களமிறங்கி நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர். ஜாபர் ஜமால் (4), அக்சய் சீனிவாசன் (0), பெரைரோ (5), மணி பாரதி (2), ஷாஜகான் (13), அந்தோணி தாஸ் (0) ஆகியோர் விரைவில் அவுட் ஆகினர். 49 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன், இணைந்த ராஜ் குமார் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார். அணியின் ஸ்கோர் 114 ஆக இருந்தபோது, கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 48 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஓவரில் ராஜ் குமார் அவுட் ஆனார். அவர் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.
ராமதாஸ் அலெக்சாண்டர் 4 ரன்னிலும், ரகுபதி ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, திருச்சி அணி 19.1 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின், சரவணக் குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்குகிறது.