டிஎன்பிஎல்: ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவையுடன் இன்று மோதல்
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
- கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது.
திண்டுக்கல்:
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. 16-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. 6 ஆட்டங்கள் கோவையில் நடத்தப்பட்டது.
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கியது.
2 ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியை வீழ்த்தியது. சேலம் அணி முதல் வெற்றியை பெற்றது. திருச்சி அணி 2-வது தோல்வியை தழுவியது.
2-வது போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது. மதுரை அணி 2-வது தோல்வியை தழுவியது.
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் (52 ரன்), 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் (7 விக்கெட்) வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது.
கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.