கிரிக்கெட் (Cricket)

சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் மீண்டும் வாய்ப்பு மறுப்பு: அணி நிர்வாகத்தை சாடிய டூவிட்டர்வாசிகள்

Published On 2022-11-22 10:25 GMT   |   Update On 2022-11-22 10:25 GMT
  • டி20-யில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து விமர்சனம்
  • உலகக் கோப்பை தோல்விக்குப்பின் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்பு

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணி பவர் பிளேயில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது முக்கிய காரணம் என விமர்சிக்கப்பட்டது. மேலும், டி20-யில் பயமில்லாமல் விளையாடும் அணுகுமுறை இந்திய வீரர்களிடம் இல்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.

இதனால் இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி நியூசிலாந்தில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இஷான் கிஷன், ரிஷப் பண்ட், புவி, வாசிங்டன் சுந்தர் இடம் பிடித்திருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இன்று 3-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வாசிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு ஹர்சல் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார். உம்ரான் மாலிக், சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது ரசிகர்களை கோப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், பல வருடங்களாக வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சஞ்சு சாம்சன், அதிவேகமாக பந்து வீசும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது குறித்து டுவிட்டர்வாசிகள் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

ஹிமான்ஷு பரீக் என்பவர் ''சஞ்சு சாம்சன் மீண்டும் புறந்தள்ளப்பட்டுள்ளார். கேப்டன், அணி நிர்வாகம் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை'' எனப் பதவிட்டுள்ளார்.

சுஷாந்த் மேத்தா ''சஞ்சு சாம்சன் இல்லை. உம்ரான் மாலிக் இல்லை. இன்னும் புவனேஷ்வர் குமார் ஏன் அணியில் உள்ளார்? இதற்கு யாராவது ஒருவர் விளக்கம் அளிக்க முடியுமா?'' என பதிவிட்டுள்ளார்.

அவினாஷ் அர்யன் ''சஞ்சு சாம்சன், உங்கள் பொறுமைக்கு தலை வணங்குகிறேன். ஒருவர் வீரர் 60 போட்டிகளுக்கும் மேல் விளையாடிய நிலையில் தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் பார்த்துக் கொண்டிருக்கிறார்'' என பதிவிட்டுள்ளார்.

வைபவ் போலா ''சஞ்சு சாம்சன் இல்லை. ஷுப்மான் கில் இல்லை. உம்ரான் மாலிக் இலலை. குல்தீப் யாதவ் இல்லை... இது நகைச்சுவை'' என பதிவிட்டுள்ளார்.

சந்தோஷ் ஆர். கோடேட்டி ''மீண்டும் சாம்சன், உம்ரான் மாலிக் பெஞ்சில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத மோசமான நிர்வாகம். புவிக்கு இன்னும் எவ்வளவு வாய்ப்பு வழங்குவீர்கள்?'' என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News