டி20 உலகக் கோப்பை தொடர்- இந்திய அணியில் விராட் கோலி
- டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியது.
- மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என தெரிவிக்கப்பட்டது.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வந்தன. இதனால், விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 இல் அவர் ரன் குவிப்பு பட்டியலில் முன்னணியில் உள்ள அவரது ஃபார்மைப் பார்த்த பிறகு, 35 வயதான கோலி 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Cricbuzz-ன் அறிக்கையின்படி, விராட் கோலி நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.