கிரிக்கெட் (Cricket)

சதமடித்த பவுமா

பவுமா போராட்டம் வீணானது - தென் ஆப்பிரிக்காவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2023-03-18 22:07 GMT   |   Update On 2023-03-18 22:07 GMT
  • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 335 ரன்கள் குவித்தது.
  • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 287 ரன்களில் ஆல் அவுட்டானது.

கேப் டவுன்:

வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 128 ரன்னில் அவுட்டானார். ரோமன் பாவெல் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். குயிண்டன் டி காக் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பவுமா சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய பவுமா 118 பந்தில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 41.4 ஓவரில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 48 ரன்களில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News