ஆன்மிக களஞ்சியம்

ஆண்டாள் சன்னதியில் நடந்த அற்புதம்

Published On 2024-09-02 11:49 GMT   |   Update On 2024-09-02 11:49 GMT
  • ராமானுஜர் அதை நினைவில் கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற போது அக்காரவடிசில் நைவேத்யம் செய்தார்.
  • அப்போது ஆண்டாள் சந்நிதியில் ஓர் அற்புதம்நடந்தது.

ஆளவந்தாரின் அனைத்து எண்ணங்களையும் பூர்த்தி செய்து விட்டு திருப்பதியில் ராமானுஜர் வைணவ பிரசாரம் செய்வதற்காக யாத்திரை மேற்கொண்டார்.

எழுபத்தி நான்கு சீடர்களும் பிற வைணவ அடியவர்களும் பின்தொடர ராமானுஜர் திவ்விய தேசங்கள் என அழைக்கப்படும் திருப்பதிகளுக்கும் இதர தலங்களுக்கும் யாத்திரை கிளம்பினார்.

முதலில் சோழ நாட்டுப்பகுதிகளில் அவர் யாத்திரை செய்தார்.

திருமங்கை ஆழ்வார் அவதரித்த ஊரில் அவர்கள் விஜயம் செய்த போது பாதையில் அவர்களுக்கு எதிரே தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி வந்தாள்.

அவளைப்பார்த்த ராமானுஜரின் சீடர்களில் ஒருவர், "பெண்ணே, ஒதுங்கி நில்" என்ற ஜாதிய வெரியுடன் உத்தரவிட்டார்.

உடனே அப்பெண், "நான் எந்தப்பக்கம் ஒதுங்க வேண்டும்? திருக்கண்ணபுரம் கோயிலை நோக்கியா? வலதுபுறத்தில் தெரியும், திருமால் தரிசனம் தந்த, திருமணங்ககொல்லையை நோக்கியா? இடதுபுறத்தில் உள்ள திருவாலிப்பெருமானை நோக்கியா? ஓங்கி உலகளந்த பரமானந்தன் எங்கும் நீக்கமற எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கும் போது நான் எந்தத்திசையைப்பார்த்து எந்தப்பக்கம் ஒதுங்கட்டும்? நீங்களே சொல்லுங்கள்" என்று திருத்தமாய் பேசியதும் ராமானுஜர் உள்ளிட்ட அங்கிருந்த அனைவருக்கும் பகீரென்று இருந்தது.

ஒருவராலும் பதில் பேச முடியவில்லை.

ராமானுஜர் தம் சீடர் சார்பாக அப்பெண்மணியிடம் மன்னிப்புக்கேட்டார்.

" எங்கள் சரீரத்தில் இடம் பெற்றுள்ள இந்த வைணவ சின்னங்கள் அனைத்தும் உனக்கே உரித்தவை, உனக்கே தகுதியானவை" என்ற அப்பெண்ணிடம் ராமானுஜர் உருக்கத்தோடு கூறினார்.

அப்பெண்மணி ராமானுஜரிடம் வணங்கி ஆசி பெற்றார்.

ராமானுஜர் அவரை வைணவ பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஸ்ரீரங்கம் மடத்திலேயே இருக்குமாறு கேட்டக்கொள்ள, அவளும் அப்படியே செய்தாள்.

அதன் பிறகு ராமானுஜர் கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

தொடர்ந்து பாண்டிய நாட்டு பாடல் பெற்ற தலங்கள், தென்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் ஆகிய பகுதிகளுக்கு எல்லாம் ராமானுஜர் சென்றார். அவர் சென்ற இடம் எல்லாம் வைணவம் வளர்ந்தது. நாராயணன் புகழ்பரவியது.

ராமானுஜர், ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் தவம் இருந்த புனித மரத்தடியை தரிசித்தார். திருவாய்மொழி உருவான இடம் அது தான் என்றும் நம்பப்படுகிறது.

இப்படியாகத் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் ஆலயம் வரை ராமானுஜரின் தீர்த்த யாத்திரை தொடர்ந்து . அதன்பிறகு துவாரகை, காஷ்மீரம், ஹரித்வார், பத்ரிநாத் ஆகிய வடநாட்டு தலங்களுக்கும்அவர் சென்றார்.

ராமானுஜர் பாண்டிய நாட்டுக்கு யாத்திரை சென்ற போது ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் சென்றார்.

ஆண்டாள் திருமாலுடன் இணைவதற்கு முன்பாக தன் திருக்கல்யாணத்துக்கு நூறு அண்டாக்கள் அக்காரவடிசில் (சர்க்கரைப்பொங்கல்) சீர்வேண்டும் எனக்கேட்டிருந்தார்.

ராமானுஜர் அதை நினைவில் கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற போது அக்காரவடிசில் நைவேத்யம் செய்தார்.

அப்போது ஆண்டாள் சந்நிதியில் ஓர் அற்புதம்நடந்தது. சிலைவடிவாக இருந்த ஆண்டாள், திடீரென உருவமாக அசைந்து அசைந்து வெளியே வந்து ராமானுஜரைப்பார்த்து "அண்ணா"என்று அழைத்திருக்கிறார்.

Tags:    

Similar News