ஆன்மிக களஞ்சியம்

அமிர்தத்தை ஔித்து வைத்த கள்ள வாரணப் பிள்ளையார்

Published On 2024-08-19 09:30 GMT   |   Update On 2024-08-19 09:30 GMT
  • விநாயகரின் இந்த லீலை பற்றி மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார்.
  • முதலில் விநாயகரை கும்பிடுங்கள். அவர் அமிர்தம் தருவார் என்று கூறி தேவர்களை விஷ்ணு அனுப்பி வைத்தார்.

பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்தத்தை தேவர்கள் கடம் (குடம்) ஒன்றில் கொண்டு வந்ததையும், அதில் இருந்து சிவபெருமான் லிங்கமாக தோன்றி அருள் புரிந்ததையும் அனைவரும் அறிவோம்.

ஈசனை கண்ட மகிழ்ச்சி தேவர்களுக்கு ஏற்பட்டாலும், அமரத்துவம் தரும் அமிர்தம் தங்களுக்கு கிடைக்காமல் போய் விட்டதே என்று வருந்தினார்கள்.

அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே என்ற தவிப்பு அவர்களுக்கு ஏற்பட்டது.

எனவே அமரத்துவம் தரும் அமிர்தம் தருமாறு அமிர்தகடேசுவரரை நோக்கி தேவர்கள் அனைவரும் வழிபட்டனர்.

பக்தன் கேட்பதைத்தான் இல்லை என்று சொல்லாமல் ஈசன் கொடுப்பாரே? அமிர்தகடேசுவரர் மறுவினாடியே தேவர்கள் முன்பு தோன்றி காட்சி கொடுத்தார்.

அவரிடம், "எங்களுக்கு அமிர்தம் வேண்டும்" என்று தேவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட அமிர்தகடேசுவரர் அருகில் உள்ள குளத்தில் அமிர்தத்தை வைத்துள்ளேன்.

போய் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு மறைந்து விட்டார்.

மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் உடனே அருகில் இருந்த குளத்துக்கு ஓடினார்கள்.

அந்த குளத்தில் சல்லடைப்போட்டு தேடிப் பார்த்தனர். ஆனால் அமிர்தம் கிடைக்க வில்லை.

தேவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது. என்ன செய்வது என்று யோசித்த அவர்களுக்கு மகாவிஷ்ணுவின் நினைவு வந்தது. உடனே அவர்கள் விஷ்ணுவிடம் ஓடிச் சென்று விபரத்தைக் கூறினார்கள்.

ஈசன் தருவதாக கூறிய அமிர்தம் எங்கே போயிற்று என்று தன் ஞானதிருஷ்டியால் விஷ்ணு பார்த்தார். அப்போது விநாயகர் அந்த அமிர்தத்தை எடுத்து ஒளித்து வைத்திருப்பது தெரிந்தது.

உலகில் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபட வேண்டும் என்பது மரபு. அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்கிறோம்.

அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், பிறகு அதை உண்ண தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகரை முதலில் நினைக்கவும் வழிபடவும் தேவர்கள் மறந்து விட்டனர்.

இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகர் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டது தெரிந்தது.

விநாயகரின் இந்த லீலை பற்றி மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார்.

முதலில் விநாயகரை கும்பிடுங்கள். அவர் அமிர்தம் தருவார் என்று கூறி தேவர்களை விஷ்ணு அனுப்பி வைத்தார்.

தவறை உணர்ந்த தேவர்கள் ஓடோடி வந்து விநாயகர் காலடியில் விழுந்து வழிபட்டு மன்னிப்புக் கேட்டனர்.

மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அமிர்த கடத்தை எடுத்துக் கொடுத்து தேவர்களுக்கு ஆசி வழங்கினார்.

தேவர்கள் அமிர்தம் உண்டு அமரத்துவம் பெற்றனர்.

அமிர்தத்தை மறைத்து வைத்த காரணத்தால் இந்த விநாயகரை கள்ள வாரண விநாயகர் என்றழைத்தனர். நாளடைவில் அது கள்ள விநாயகர் என்று மாறி விட்டது.

இந்த கள்ள விநாயகர் திருக்கடையூர் ஆலயத்தின் தொடக்கத்தில் கன்னி மூலையிலோ அல்லது முச்சந்திகளிலோ இல்லை. ஆலயத்தின் உள்ளே மகா மண்டபம் பகுதியில் ஈசனை பார்த்தபடி ஓரு ஓரத்தில் உள்ளார்.

அதாவது அமிர்தம் எடுத்து பதுங்கி இருந்ததை சுட்டிக் காட்டுவது போல அவரது சன்னதி மகா மண்டபத்தில் ஈசனின் கருவறைக்கு தென் கிழக்கில் ஓரு ஓரமாக உள்ளது. அவரது துதிக்கையில் அமிர்த கலசம் உள்ளது.

இதன் காரணமாக இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

உறவினர்கள் மற்றும் பகைவர்களிடம் நீங்கள் எதையாவது இழந்து தவித்தால் இந்த விநாயகரை வழிபட சுபம் ஏற்படும்.

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. அதில் இத்தலத்து கள்ள வாரண விநாயகர் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார்.

சமஸ்கிருதத்தில் இவரை "சோர கணபதி" என்று அழைக்கிறார்கள். அபிராம பட்டர் அந்தாதி பாடத் தொடங்கிய போது இந்த கள்ள விநாயகரை புகழ்ந்து பாடி விட்டே அந்தாதி பாடி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News