ஆன்மிக களஞ்சியம்

அனைத்து வித சாபங்களையும் நீக்கும் அய்யவாடி மகா பிரத்தியங்கராதேவி

Published On 2024-08-13 10:45 GMT   |   Update On 2024-08-13 10:45 GMT
  • புலிபாணி சித்தர் அழகாக தமிழில் இந்த தேவியை பாடல்களில் மந்திரத்தில் சொல்லி உள்ளார்.
  • சனிபகவானின் குமாரர் குளகன் இந்த தேவியை வழிபட்டு உள்ளான்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், அய்யாவாடி (ஐவர்பாடி) என்ற கிராமத்தில் ஸ்ரீ அதர்வண பத்திரகாளி, பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது.

இக்கோவில் இந்தியாவில் தமிழகத்தில் இங்கு மட்டும்தான் அமைந்துள்ளது.

அம்பிகை சிம்ம முகத்தோடும் 18 திருக் கரங்களோடும் 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் லட்சுமி சரஸ்வதியோடு காட்சி தருகிறாள்.

ஸ்ரீ பிரித்தியங்கிரா தேவி ஆங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் என்ற மகரிஷிகள் உபாசன மூர்த்தியாக பூஜித்து 20 அக்ஷரம் கொண்ட மந்திரத்தை ஜபித்து அவர்கள் பெயரைக் கொண்டு இந்த தேவி விளங்குகிறாள்.

ஸ்ரீமகா பிரத்தியங்கிரா தேவி சரபேஸ்வரருடைய நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவள்.

நரசிம்மம் என்ற கண்ட பேருண்டத்தை அடக்கவே அவதரித்தாள் அவள்.

ஆயிரம் முகங்கள், 2 ஆயிரம் கைகள், சிவப்பேறிய மூன்று கண்கள், கரிய நிறம் மிகப் பருத்த சரீரம், பெருங்கழுத்து நீலநிற ஆடை, கபாலமாலை, பயங்கரமான புலி நகம் போன்ற கைகளோடு அவதரித்து கண்ட பேருண்டம் என்ற நரசிம்மத்தை யுத்தம்செய்து சாப்பிட்டு விட்டாள்.

அவளே உக்ரபிரத்தியங்கிரா தேவி. அந்த தேவி சாந்தம் அடைய சரபரும், தேவர்களும், ரிஷிகளும் எல்லோரும் துதித்தனர். அவள் விஸ்வரூபம் அடங்கி ஸ்ரீமகா பிரத்தியங்கிரா தேவியாக காட்சி தந்தாள்.

இந்த தேவியை சித்தர்கள், அகத்தியர், பஞ்சபாண்டவர்கள், ராமர், லட்சுமணன், இந்திரஜித் (மேகநாதன்), இவர்கள் பூஜித்துள்ளனர்.

இந்திரஜித் ராமரோடு யுத்தம் செய்து தோற்றுபோய் இவ்விடத்தில் அம்பிகையை வழிபாடு செய்தான். அவன் மாயாவி என்பதால் எட்டுத்திக்கும் மாசான பூமியும் பூத பிரேதங்களும் வைத்து நிகும்பலா யாகம் செய்ய விபீசனர் ராமரிடம் சென்று இந்திரஜித்தை காணவில்லை.

அவன் யாகம் செய்து முடித்துவிட்டால் அவனை ஜெயிக்க யாராலும் முடியாது என்று சொல்ல ராமர் இவ்விடம் வந்து அம்பிகையை பிரார்த்தித்தார்.

அம்பிகை ஸ்ரீராமருக்கு அனுக்கிரகம் செய்துவிட்டு மறைந்து விட்டாள். மேகநாதன் யாகம் செய்ய முடியாமல் பல இடம் தேடி அம்பிகையை காணாமல் யுத்தத்தில் உயிர் பிரியும் தருவாயில் அம்பிகையை பிரார்த்தனை செய்தான்.

அம்பிகை காட்சி தந்து தர்மமே வெல்லும் என்று சொல்ல, எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று பிரார்த்தித்தான். வேண்டும்வரம் தருகிறேன் என்று சொல்ல மரண, ரிபு, விஷ, வியாதி தாரித்திரிய நாசி நீம் என்ற வரத்தை பெற்று அம்பிகை திருவடியை அடைந்தார்.

இந்திரஜித் வரம் பெற்ற தலம் என்றும் புராணம் கூறுகிறது. அவன் வழிபட்ட தலம் ஆதலால் இன்றும் எட்டுதிக்கில் மயான பூமியும் ஒரே ஆலமரத்தில் 5 விதமான இலைகளை கொண்ட அதிச தலவிருட்சமும் சிம்மமுக காளியையும் இன்று காணலாம்.

பஞ்சபாண்டவர் பூஜித்தபடியால் ஐவர்பாடி என்ற நாமம் சம்மந்தரால் திருக்கோவையில் பாடி நான்கும் என்ற பதிகத்தோடு காரணப் பெயர் உள்ளது.

இந்த தேவியை வழிபாடு செய்தால் பிறரால் ஏவப்படும் ஆபிசார தோஷம், பில்லி சூணியம், ஏவல், வைப்பு, ரணம் ரோஹம் மிருத்தியுபயம் 64 விதமான சாபங்கள், மாதுருசாபம், பிதுர்சாபம், நர, மிருசு பசு, பட்சி இவர்களால் ஏற்படும் சாபங்களும் நிவர்த்தி ஆகும்.

இந்த தேவியை பற்றி ருக்வேதத்தில் 48 பஞ்சாதிகள் பெருமைப் படுத்துகிறது. இவளுக்கு மேல்எந்த மந்திரமும் தெய்வமும் இல்லை என்று அதர்வண வேதம் கூறுகிறது.

தேவி, தேவிமகாதேவி, மமசத்ருன், விநாசய என்றும் குஞ்சிதாங்கிரியில் உமாபதி சிவம் என்றும் அழகாக சொல்லியுள்ளார்கள்.

பிரத்தியங்கிரா தேவி பற்றி பல விஷயங்கள் பெரியோர்களும், மகான்களும் கூறுவார்கள். 9 விதமாக பிரத்தியங்கிரா அவதரித்து சரப சக்தியாக கூறுவார்கள்.

பால பிரத்தியங்கிரா, பிராம்பி பிரத்தியங்கிரா ருத்ர பிரத்தியங்கிரா, உங்கிர பிரத்தியங்கிரா, விபரீத பிரத்தியங்கிரா, லம்பிய பிரத்தியங்கிரா, அதர்வண பிரத்தியங்கிரா, சிம்ம முக காளி, மகா பிரத்தியங்கிரா என்று அவர்களை கூறுவார்கள்.

புலிபாணி சித்தர் அழகாக தமிழில் இந்த தேவியை பாடல்களில் மந்திரத்தில் சொல்லி உள்ளார். பிரபஞ்ச ஸார ஸங்ர ஹித்தில்

பிரத்தியங்கிரா த்யானசிலே ந சூர்யாத் திவேஷ மாத்மனி என்ற பழமொழியால் இத்தேவியை யார் வழிபடுகிறார்களோ அவரிடம் துவேஷம் கொள்ளக் கூடாது என்றும் உள்ளது.

சனிபகவானின் குமாரர் குளகன் இந்த தேவியை வழிபட்டு உள்ளான்.

ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்கள் 3, 6, 8, 12ல் உள்ள திசைகள் மாந்தி குளிகன் மற்றும் நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகி பல கோடி செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழவும் நோயற்ற வாழ்வும் 16 வித செல்வங்களை அடையவும் இத்தேவியை தரிசித்து அருள்பெறலாம்.

Tags:    

Similar News