பக்தர்களை மேட்டுக்கு கொண்டு வரும் திட்டை பகவான்
- குருபகவானுக்குரிய மற்றொரு சிறப்பான தலம் திட்டை.
- தென்குடித் திட்டை திருத்தலத்தைத்தான் எல்லோரும் திட்டை என்று சொல்கிறார்கள்.
குருபகவானுக்குரிய மற்றொரு சிறப்பான தலம் திட்டை. தென்குடித் திட்டை திருத்தலத்தைத்தான் எல்லோரும் திட்டை என்று சொல்கிறார்கள்.
திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது. அதாவது திட்டை என்றால் மேடு என்று பொருள்.
பக்தர்களாகிய நம்மை, மேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதை, இப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டு, சூசகமாகச் சொல்கிறார் தென்னாடுடைய சிவனார்.
இங்கு நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள குரு காத்திருக்கிறார்.
ஒரு கோவிலில், கோபுர வாசல் வழியே உள்ளே வந்து, பலிபீடம், கொடிமரம், நந்தியெல்லாம் கடந்து, மகா மண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் பார்த்துக் கொண்டே, அங்கே இருக்கிற விநாயகரையும் துவார பாலகர்களையும் தரிசித்தபடியே, கருவறைக்கு அருகில் வருவோம்.
அங்கே கருவறையில் இருக்கிற தெய்வமே மூலக் கடவுள். மூலவர்.
அவரின் திருநாமத்தைக் கொண்டே அந்தக் கோவில் அழைக்கப்படும். கல்வெட்டுகளிலும் குறிப்புகளிலும் அறநிலையத்துறை பதிவுகளிலும் மூலவரின் பெயரைக் கொண்டே கோவில் குறிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், அந்த மூலவரின் சாந்நித்தியத்தையும் கடந்து, மக்களின் மனங்களில் பரிவார தெய்வமாகத் திகழ்பவர் அப்படியே பதிந்துவிடுவார். அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்து, கோவிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார்.
தமிழ் கூறும் நல்லுலகில், இப்படி பரிவாரக் கடவுளே, பரிகாரக் கடவுளாகவும், பலன் தரும் தெய்வமாகவும் நின்று அருள்பாலிக்கிற ஆலயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில், திட்டை திருத்தலமும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம். இங்கே, மக்களின் மனங்களில் இடம் பிடித்த, குரு பகவானே முதன்மையாக வழிபடப் படுபவராக உள்ளார்.
தமிழகத்தில் குரு பகவான் குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களில், திட்டை முக்கியமான தலம் ஆகும்.